“மண்ணின் மைந்தன்” வைத்தியர் தங்கமுத்து சத்தியமூர்த்தி
கிளிநொச்சி மண்ணில் பிறந்து வளர்ந்து வைத்தியராக உயர்ந்து அந்த மண்ணில் சேவைசெய்து இன்றுவரை அப்பிரதேச மாணவர்களின் கல்விக்காகவும் மக்களின் சமூக நலனுக்காவும் தனது பணிகளை செய்துவரும் வைத்தியர் சத்தியமூர்த்திக்கு கிளி மக்கள் அமைப்பினால் 2019ம் ஆண்டுக்கான “மண்ணின் மைந்தன்” விருது பங்குனி 2ம் திகதி 2019ம் ஆண்டு இலண்டனில் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
கிளிநொச்சி பிரதேசத்தில் போர் சூழ்ந்த காலத்தில் மிகவும் திறமையுடன் செயல்பட்டதுடன் முள்ளிவாய்க்கால் வரை தனது பணியை முன்னெடுத்த இவர் மீண்டும் கிளிநொச்சியில் கடமையை தொடர்ந்தார். முள்ளிவாய்க்கால் வைத்தியர் எனப்போற்றப்படும் இவர் வைத்தியத்துறையின் வளர்ச்சிக்கு கனதியான பங்களிப்பினை வழங்கி வருகின்றார். தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக கடமையாற்றுகின்றார்.
மேலைத்தேச நாடுகளில் காணப்படும் உயர் கல்வி மாணவர்களுக்கு கடன் வழங்கும் திட்டத்தை முதன்முதல் கிளிநொச்சியில் கல்வி வளர்ச்சி அறக்கட்டளை ஊடாக அறிமுகப்படுத்தி வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதில் இவர் முன்னின்று இயங்குகின்றார். கிளிநொச்சி மண்ணில் கல்விக்கு தனித்துவமான பரிணாமத்தை கொடுத்த விஞ்ஞானக் கல்வி நிலையத்தை தற்போது கிராம மட்டங்களில் பல கிளைகளைக் கொண்டு கல்வியை கிராமங்களினூடாக முன்னெடுப்பதில் முன்னிற்று செயல்படுகின்றார்.
1970ம் ஆண்டு ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்து போரின் சூழலில் வளர்ந்து படித்து வைத்தியானாகி அந்த பிரதேசத்தில் இன்றுவரை கடமையாற்றி அப்பிரதேச மக்களின் கல்விக்கும் சமூக வளர்ச்சிக்கும் அயராது பணியாற்றும் முள்ளிவாய்க்கால் வைத்தியர் சத்தியமூர்த்திக்கு மண்ணின் மைந்தன் விருது வழங்குவதில் பெருமையடைகின்றோம்.