தமிழ்த் தேசியத்தின் மீதான தீராக் காதலுடன் வன்னி மண்ணில் வாழ்கின்ற சாமான்ய மக்களின் வாழ்வைத் தனது எழுத்தின் பாதையில் சுமந்தபடி ஒரு வன்னியாச்சியாகவே இவர் நடந்து வந்திருக்கின்றார். கிளிநொச்சி மண்ணின் உழைக்கும் மக்களின் வாழ்வியலை இலக்கியத்தில் ஏற்றி வைத்த இந்த வலிமை மிக்க எழுத்துப் போராளிக்கு கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பு 2022ம் ஆண்டுக்கான மண்ணின் மகள் விருதினை வழங்குவதில் பெருமை கொள்கின்றது.
பச்சைப்பசேலென்று பரந்து கிடக்கும் வயல்பரப்புக்கள். அதன் மேலாகப் பறந்து திரியும் வெண்நிறப்பறவைகள். பரந்து கிளை பரப்பி நிற்கும் அடர்ந்த மரக்கூட்டம். வெள்ளம் புரண்டோடும் வாய்க்கால் கரைகள். நீர் தழும்பி நிற்கும் குளங்கள். இவையெல்லாம் வன்னி மண்ணின் அடையாளங்கள். வடக்கின் நெற்களஞ்சியம் என்று வர்ணிக்கப்படுகின்ற கிளிநொச்சி நகரத்தைக் கட்டியெழுப்பிய மனிதர்களின் கதைகளை, அந்த மண்ணின் வாசனையை கடந்த ஐம்பது வருடங்களாக தனது எழுத்துக்களில் பதிவு செய்தபடி பயணித்து வந்தவர் தாமரைச்செல்வி. கிளிநொச்சி மண்ணில் வாழும் விவசாய மக்களின் உழைப்பை, அவர்களது சந்தோஷங்களை, துக்கங்களை, அலைச்சல்களை அனைத்து மக்களிடமும் தன் எழுத்துகள் மூலம் கொண்டு சேர்த்தவர். எளிய வாழ்வுக்குரித்தான அந்த உழைக்கும் மக்களை இலக்கியப் பல்லக்கில் ஏற்றி வைத்தவை இவரது எழுத்துக்கள். தனித்துவமான வன்னியின் சாயலை இலக்கியத்துக்குள் கொண்டு வந்தது, இவர் கைப் பிடித்த பேனா.
கிளிநொச்சி பிரதேசத்தின் பரந்தன் பகுதியில் உள்ள குமரபுரம் எனும் கிராமத்தில் சுப்பிரமணியம் இராசம்மா தம்பதிகளின் மூத்த புதல்வியாக 1953 ஆண்டு இவர் பிறந்தார். ஐந்தாம் வகுப்பு வரையான கல்வியை பரந்தன் இந்து மகாவித்தியாலயத்திலும் பத்தாம் வகுப்பு வரையான கல்வியை யாழ் இந்து மகளிர் கல்லூரியிலும் பெற்றுக்கொண்டார். சிறுவயதிலிருந்தே வாசிப்பில் ஆர்வம் கொண்ட இவருக்கு எழுதவேண்டும் என்ற எண்ணம் வந்தபோது ரதிதேவி என்ற தனது சொந்தப் பெயரை விட்டு தாமரைச்செல்வி என்ற புனை பெயரோடு வானொலிக்கு 1973 ல் எழுத ஆரம்பித்தார். வானொலிக்கு எழுதுவதோடு நின்றுவிடாமல் 1974 ம் ஆண்டு பத்திரிகைகள், சஞ்சிகைகளுக்கும் எழுதுவதன் மூலம் அதனது இலக்கியப் பயணத்தை தொடர்ந்து மேற்கொண்டார்.
இதுவரை இருநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், மூன்று குறுநாவல்கள், ஏழு நாவல்கள் எழுதியிருக்கிறார். இதுவரை நான்கு சிறுகதைத் தொகுப்புக்கள், ஒரு குறுநாவல், ஆறு நாவல்கள் நூல் வடிவம் பெற்றிருக்கின்றன. தாமரைச்செல்வி தந்தவை கதைகள்தான் என்ற போதும் அதன் கருவில் எப்போதும் ஒட்டி நிற்பவை உண்மைகள். மண் வாசம் மாறா மெய்மைகள். பொய்யான ஒன்றை இவர் எப்போதும் புனையவில்லை. எப்போதும் சமூகப் பொறுப்போடும் மண் மீதான நேசிப்போடும் ஆத்மார்த்தமான உண்மையோடும் ஒருவித அமைதியோடும் நிதானத்தோடும் பயணிப்பவை இவருடைய கதைகள். இவரும்தான்.
இவரது ஆற்றல் மிகு படைப்புக்களுக்காக தாயகத்திலிருந்தும் தமிழ்நாட்டிலிருந்தும் விருதுகள், கௌரவங்கள் இவரைத் தேடி வந்தன. இவரது “இன்னொரு பக்கம்” என்ற சிறுகதை இலங்கையின் பதினோராம் ஆண்டுக்குரிய தமிழ்ப்பாடத் திட்டத்திலும் “பசி” என்கின்ற சிறுகதை தமிழ்நாட்டின் பதினோராம் வகுப்புக்கான பாடத்திட்டத்திலும் இணைக்கப்பட்டிருப்பது இவரது எழுத்தின் வலிமையைக் கூறுகின்றது. இவற்றைத்தவிர தாயகத்தின் பிரபல இலக்கிய ஆளுமைகளால் இவரது சிறுகதைகள் ஆங்கிலம் சிங்களம் , ஜேர்மன் மொழிகளில் மொழிமாற்றம் கண்டுள்ளன.
போராளிக் கலைஞர்களாளும் தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் தென்னிந்திய திரைப்பட இயக்குனர்களான மகேந்திரன் அவரது மகன் ஜான் மகேந்திரன் மற்றும் தமிழ்நாடு ஜே.டி.இமயவர்மன் என்பவர்களாளும் இவரது சிறுகதைகள் குறும்படங்களாக எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை இலங்கையின் யாழ் பல்கலைக்கழகம், பேராதனைப் பல்கலைக்கழகம், கிழக்குப் பல்கலைக்கழகம் ஆகியனவற்றில் பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தமது பட்டப்படிப்பின் ஒரு பகுதியாக இவரது எழுத்துக்களை ஆய்வு செய்திருக்கின்றார்கள்.
இவருக்கு ஓவியம் வரைவதிலும் ஆர்வம் உண்டு. தனது கதைகளுக்கு தானே ஓவியமும் வரைந்திருக்கின்றார். எண்பதுகளில் கொழும்பில் இருந்து வெளிவந்த சித்திரா என்ற சித்திரச் சஞ்சிகையில் சித்திரக்கதைகள் எழுதியிருக்கின்றார். அதே காலத்தில் சூரியகாந்தி என்ற கையெழுத்து சஞ்சிகையையும் நடத்தியிருக்கிறார். அவற்றை பரந்தன் இளைஞர் வட்டம் வெளியீடு செய்திருந்தது.
……
தாமரைச்செல்வியின் படைப்புக்கள் வெறுமனே பார்வையாளராக இருந்து உருப்பெற்றவையல்ல. வன்னிப் பிரதேசத்தின் தனித்துவமான பண்பாடு, கலாசாரம், வாழ்க்கைமுறை என்பனவற்றையும் போர்மேகங்கள் எம்மண்ணைச் சூறையாடி சிதைத்தெடுத்த காலப்பகுதியிலும் மக்களோடு மக்களாக வாழ்ந்து அனுபவித்த அலைச்சல்களையும் துன்பங்களையும் உள்ளடங்கலாகவே படைக்கப்பட்டிருக்கின்றன.
கிளிநொச்சி மண்ணில் பிறந்து வாழ்ந்த ஒரு கிராமத்துப் பெண் ஐம்பது ஆண்டு காலமாக தங்களது வாழ்க்கையில் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்களை கதைகளாகத் தொடர்ந்து சொல்லிக் கொண்டே வந்ததன் மூலமாக ஒரு மாபெரும் சமூகச் செயற்பாட்டில் ஈடுபட்டிருக்கிறார். இவரது எழுத்துக்கள் ஈழத்தமிழரின் வாழ்வியல் வரலாறு குறித்த ஒரு இலக்கிய சாட்சியத்தையும் உருவாக்கியிருக்கிறது என்றே குறிப்பிட முடிகிறது.
தமிழ்த் தேசியத்தின் மீதான தீராக் காதலுடன் வன்னி மண்ணில் வாழ்கின்ற சாமான்ய மக்களின் வாழ்வைத் தனது எழுத்தின் பாதையில் சுமந்தபடி ஒரு வன்னியாச்சியாகவே இவர் நடந்து வந்திருக்கின்றார். கிளிநொச்சி மண்ணின் உழைக்கும் மக்களின் வாழ்வியலை இலக்கியத்தில் ஏற்றி வைத்த இந்த வலிமை மிக்க எழுத்துப் போராளிக்கு கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பு 2022ம் ஆண்டுக்கான மண்ணின் மகள் விருதினை வழங்குவதில் பெருமை கொள்கின்றது.




