கிளிநொச்சி மாவட்ட கல்வித்துறையில் மாணவர்களிடையே எழுச்சிகரமான ஆர்வத்தை ஏற்படுத்தி கல்வி, சமூக. ஊடக, கலை மற்றும் மனிதநேய பணிகளை தொடர்ச்சியாக முன்னெடுத்தமைக்காக கிளிமக்கள் அமைப்பினால் 2021 ம் ஆண்டுக்கான “மண்ணின் மைந்தன்” விருதினை ஆடி மாதம் 16ம் திகதி 2022ம் ஆண்டு கல்வியியலாளர் எட்வேட் மரியதாசன் அவர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
1955ம் ஆண்டு பிறந்த இவர், கிளிநொச்சி புனித பற்றிமா பாடசாலையிலும் பின்னர் யாழ் புனித பரியோவான் கல்லூரியிலும் கல்விகற்றார் . அமிர்தநாதர் எட்வேர்ட், தாய் எட்வேர்ட் அருளம்மா, 8 சகோதரர்கள்,
தனது 20 வது வயதில் வெண்கட்டி எடுத்து ஆசிரியத்தொழிலில் காலடி வைத்தார் . 1975ம் ஆண்டில் ஏ9 வீதிக்குக்கு கிழக்கே, இராமநாதபுரம் மகா வித்தியாலயத்தில் தனது ஆசிரியப் பயணத்தைத் தொடங்கிய இவர் தொடர்ந்து வட்டக்கச்சி மத்திய கல்லூரியிலும் கிளிநொச்சி மகா வித்தியாலயத்திலும் ஆசிரியராக பணிசெய்து கல்வியின் வீரியத்தை ஆழ்மனங்களில் பரவ விட்டார். கணிதத்தின் சூட்சுமங்களை கற்பிப்பதில் சிறப்புக்கொண்ட இவர் கிளிநொச்சியின் சேவைக்கால பாடவிதான ஆலோசகராகவும் சேவையாற்றினார். பளையில் இயங்கிய ஆசிரியருக்கான தொலைக்கல்வி பயிற்சிக் கல்லூரியின் கணித பாடத்துக்கான போதனாசிரியராகவும் பொறுப்பதிகாரியாகவும் கடமையாற்றினார்…
1975ம் ஆண்டு கிளிநொச்சிப் பிரதேசத்தில் கல்வியில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்திய விஞ்ஞானக் கல்வி நிலையத்தை உருவாக்கினார். இரண்டு மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிலையம் இன்று 6 விஞ்ஞானக் கல்வி நிலையங்களாக விரிவாக்கம் அடைந்து சுமார் 1600 மாணவர்களுக்கு கல்வியூட்டி வருகின்றது. அன்று இவர் போட்ட விதை இன்று பெரு விருட்சமாக விழுதுகளுடன் பயணிக்கின்றது…..
கல்வியைத் தேடித் தேடி ஓடித்திரிந்த நலிந்த உலகத்தில் வாழ்ந்த அன்றைய மாணவர்களின் கல்விப்பசிக்கு விஞ்ஞானக்கல்வி நிலையத்தின் பங்களிப்பு மிகப்பெரியதாக விளங்கியது.
1990 களில் கிளிநொச்சியின் பெருமைமிகு அடையாளமாகத் திகழ்ந்த கவின்கலைக் கல்லூரி உருவாக்கத்தில் பெரும்பங்கு வகித்ததுடன் பணிப்பாளராகவும் வரலாற்றுக்கடமையை செழுமையுடன் ஆற்றியவர்.
இடப்பெயர்வுகளின்போது கலைப் படைப்புக்களையும் உபகரணங்களையும் தனது குழுவினருடன் காவித்திரிந்து பாதுகாப்பிடம் தேடித்தந்த வரலாற்றுக்குரியவர்..
தமிழ்த் தேசியம் நோக்கிய கலைப்படைப்புகளை கிளிநொச்சியில் முகிழ்விட முனைப்பெடுத்த பெருமகன். பல விடுதலை வீச்சுக்கள் கூட இவரது கல்வியால் ஆளுமைகொண்டதும் அன்றைய வரலாறு ஆகும். கொழும்பில் நெருக்கடியும் சுற்றிவளைப்பும் முனைப்படுத்த காலங்களிலும் கைதுசெய்யப்பட்டு கூண்டுக்குள் அடைத்து கடும் விசாரணைகள் நடந்தபோதும் கலங்காது எதிர் கொண்ட வலிமையான மனதுக்குச் சொந்தக்காரன்…
இன்று அன்பு மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் ஆஸ்திரேலியாவில் வாழும் இவர், அங்கே புலம்பெயர் தமிழர்களின் கலை கலாசாரம் மற்றும் தமிழ்மொழி வளர்ச்சி என தனது சமூகப்பணிகளை விரிவுபடுத்தினார். நாடகங்கள், கூத்துக்கள் என இவருக்கு இருக்கும் ஆர்வம், பல மேடைகளைக் களம் காண வைத்தது. ஆஸ்திரேலிய உள்ளூராச்சி அமைப்பில் தமித்துறை ஒன்றியத்தினால் வானமுதம் எனும் வானொலியில் கடந்த 15 வருடங்களாக பணிபுரிவது மேலுமொரு சிறப்பு …
இன்று தமிழ் ஆசிரியராக ஆஸ்திரேலிய தமிழ் பாடசாலையில் கடந்த 10 வருடங்களாக தமிழ் கற்பித்து வருவதுடன் அப்பாடசாலையின் முதல்வராகவும் பணிபுரிந்திருக்கின்றார்…
முத்தமிழையும் எடுத்துச்செல்லும் காவலனாக அவுஸ்திரேலிய கண்டத்தில் பெரும் பணிசெய்வதில் நிறைவுகொள்பவர் . விஞ்ஞானக் கல்வி என்பது ….எட்டாக் கல்வி என்று முந்திரை குத்தப்பட்ட பிரதேசமாக கிளிநொச்சி?
அந்த எண்ணக்கருவை சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்னர் உடைத்தெறிந்த பேராசான். கணிதமும் விஞ்ஞானமும் அடிப்படை என்பதை உணரவைக்கத் தொடங்கினார் . மாணவர்களின் கல்வி ஏக்கங்கள் யாவும் வசப்படுமென நம்பிக்கை கொடுத்தார் . அந்த மண்ணின் முதல் மருத்துவர், முதல் பொறியலாளர் என அனைவரும் இவரது மாணவர்களென அமைந்த பெருமிதம். கிளிநொச்சி எமக்குமொரு தலைநகராக எழ இவரது மாணவர்கள் சேவையாளர்களாக உருவானதை பார்த்து பூரித்து நின்றார்…
கிளிநொச்சிப் பிரதேசத்தின் கல்வியில் புது விதியை அன்று தொடங்கியர், கல்வி, சமூகம் கலை மொழி என பெரும் சேவைசெய்த பேராளுமை கொண்ட பேராசானுக்கு கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பு 2021ம் ஆண்டுக்கான மண்ணின் மைந்தன் விருதினை வழங்கி வைப்பதில் பெருமைகொண்டது.