வாழும் காலத்தில் ஒரு மனிதன் மாண்புடன் வாழ்கின்றார். வன்னி மண் பெற்றெடுத்து, அந்த மண்ணின் மனிதர்களுக்குத் தத்துக்கொடுக்கப்பட்ட ஒரு மனிதனுக்கான விருது. 1968 ஆம் ஆண்டு ஆனி மாதம் 11 ஆம் நாள் முல்லைத்தீவின் கரைச்சிக் குடியிருப்புக் கிராமத்தில் ஒரு குழந்தையின் அழுகுரல். 12 சகோதரர்களின் கால்த்தடங்கள் பதிந்த அந்த வீட்டில், ஐயா வீரகத்திப்பிள்ளை, அம்மா கனகம்மா ஆகியோருக்குப் பிறந்தார் வீரகத்திப்பிள்ளை சண்முகராஜா.
எழுத்தாணி எடுத்துக் கல்விக் களம் கண்ட இடம், முல்லையின் புகழ்பூத்த வித்தியானந்தாக் கல்லூரி. அந்த மருத நிலத்துக் கலங்கரை விளக்காக, அன்றுமுதல் இன்றுவரை பிரகாசிக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தின் அடையாளமான வித்தியானந்தாக் கல்லூரியின் விருப்பத்துக்குரிய மாணவனாக, மாணவ தலைவனாக, பல்கலைக்கழகம் செல்லும் கனவு நாயகனாக வலம்வந்த காலங்கள் அவை, அவரது கனவும் நிறைவேறியது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் கல்வி கற்று இன்று யாழ்ப் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளராக கடமையாற்றும் இவரது வாழ்வு எப்படிப்பட்டது! தாயக மண் இவரது மருத்துவப்பணிக்காக காத்திருந்ததும் எப்படி!
தாய் நிலத்தின் விடுதலைக்கான வேள்வித்தீயில் ஒரு முதலுதவியாளனாக 1991 ஆம் ஆண்டு இணைந்து மருத்துவப்பிரிவில் தன் பயணத்தைத் தொடர்ந்தார். மருத்துவனாகும் முன்னரே களம் காணப்புறப்பட்ட இவர் களமாடும் மறவருக்கு மருத்துவக் கவசமாக மாறத்தொடங்கினார். அந்தத் தாயக மக்களின் உயிர் காக்கும் நட்சத்திரமாகவும் மாறினார்.
கிளாலி கடலில் நடுநிசிகளில் அரக்கர்களின் கோரத்தாண்டவம் நடந்த காலங்கள்…., மருத்துவப் பிரிவின் தலைமை முதலுதவியாளனாக விழிமூடா இரவுகளுடன் அந்த வானம்பார்த்த ஏரிக்கரையும் மணல் வெளியும் வாழ்விடமாகியது இவனது அறப்பணிக்கு…. ஆம் இவனது மருத்துவப்பிரிவு தயார் நிலையில் இருக்கும், இவனது அனுமதி கிடைத்ததும் மக்களுக்கு கிளாளிக்கடலில் பாதை திறக்கும்….இதுவொரு வரலாறு.
வைத்திய அதிகாரியாக யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மல்லாவி, பளை, கண்டாவளை, கிளிநொச்சி வைத்தியசாலைகளில் தொடர்ச்சியாக பணிபுரிந்தவர், கிளிநொச்சியில் இயங்கும் தற்போதைய பொது வைத்தியசாலை 2006 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டபோது முதல் நோயாளரை பார்வையிட்டவரும் இவரே, பிரசவத்திற்கான முதல் சத்திரசிகிச்சை செய்தவரும் இவரே!
2009 ஆம் ஆண்டு உலகின் மனிதப் பேரவலமொன்றினை அரங்கேற்ற உலகநாடுகளெல்லாம் ஓரணியில் திரண்டுநின்றபோது, எம் தேச மறவர்களில் சிறகுகளுக்குள் அடங்க முடியாது எம்முறவுகள் தத்தளித்து பரிதவித்து சாவின் வாசலில் கண்ணீரோடு அல்லலுற்று நின்ற வேளை. எல்லாத்திசைகளிலும் அவலங்கள், எங்கும் உயிரின் அழிவுகளும் பேரவலங்களும் நிறைந்திருக்க, அப்போது முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராகக் கடமையாற்றிய இவருடன் இடம்பெயரும் போதெல்லாம் மக்களின் இருப்பிடம் தேடி வைத்தியசாலையை தற்காலிகமாக அமைத்து பணி செய்தது இவரது மருத்துவக்குழு.
இறுதி யுத்தம் மக்களின் உயிர்களை காவு கொள்ளும் காலம், அடிப்படை சுகாதார வசதிகளுக்கே தடைவிதித்த நெருக்கடியான காலமது, குண்டுகள் மாரி மழையை மிஞ்சி பொழிந்துகொண்டிருந்த இரவுகளும் பகல்களும். அந்தக் காலங்களில் ஒரு மகப்பேற்று சத்திரசிகிச்சை வைத்தியராக கடைசி இரு வருடங்களில் சுமார் 6000 தாய்மார்களுக்கு பிரசம் பார்த்ததுடன், சுமார் 1000 தார்மார்களுக்கு சத்திர சிகிச்சை மூலமும் பிரசவம் பார்த்த இவரின் கதைகளை இன்றும் அந்த முள்ளிவாய்க்கால் நிலம் கண்ணீரோடு சொல்வது உங்களுக்குக் கேட்டிருக்கும்.
எல்லாம் ஓய்ந்துகொண்டிருந்த கடைசி நாட்கள்……, 2009 ஆம் ஆண்டு மே மாதம் 15ம் திகதி, மாஞ்சோலை வைத்தியசாலை தன் கடைசிக் கண்ணீரை சொரியக் காத்திருந்தது. ஒவ்வொரு கணங்களும் பாரமாய் கடக்கையில், அதிகாரக் கைகள் வட்டமிட்டன, முள்ளிவாய்க்கால் வரை உயிர்வாழத்துடித்த மனிதர்க்கெல்லாம் மருத்துவப் பணிசெய்தவன் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டான்.
கடும் விசாரணைகளோடு தடுப்பில் துவளாத மனதுடன் கடினமான காலத்தைக் கடந்துவந்த இவர், எல்லாம் இழந்து, எல்லாம் அழிந்து, எதுவும் இல்லையென்று, சொந்த மண்ணில் வாழமுனையும் மீதமுள்ள உறவுகளுக்காக மீண்டும் தன் பணிக்காக தெற்கிலிருந்து அந்த வன்னிநிலம் வரவேற்கின்றது என்று முன்னர் இருந்த வடக்கு வாசலைத் தாண்டித், தான் நேசித்த தாய்மண் நோக்கி மீண்டும் தன் மருத்துவப்பணியை தொடங்கினார்,…
உலகமே வியந்துநின்ற ஒரு கட்டமைப்பில் பெரும் படையும் அவர்கள் நேசித்த மக்களும் நடாத்திய வேள்வியில் தன் மருத்துவப்பணியால் வரலாறு படைத்தவன், தூங்க மறுத்த இரவுகளால் உறவுகளின் உயிர் காத்து இனம் காத்தவன். எதுவும் இனி இல்லையென்ற போதும் மனம்தளராது இன்றுவரை நலன் காக்கும் மனிதநேயம் கொண்ட முள்ளிவாய்க்கால் வைத்தியர் வீரகத்திப்பிள்ளை சண்முகராஜா` அவர்களுக்கு கிளி மக்கள் அமைப்பின் 2024 ஆம் ஆண்டுக்கான மண்ணின் மைந்தன் விருதினை வழங்குவதில் கிளி மக்கள் அமைப்பு பெருமைகொண்டது.







