தாய்மண்ணை அளவில்லாப் பேரன்புடன் நேசிக்கும் ஒரு மனிதநேய வைத்தியர். யுத்தப் பேரிடர்களிலும் ஆழிப்பேரலையிலும் தூங்காத இரவுகளால் மக்களைக் காத்த மருத்தவர். இன்று உலகளாவிய நாடுகளிலெல்லாம் நோய்ப்பரம்பல் கட்டுப்பாட்டு நிபுணத்துவபணி புரியும், எம் கிளிநொச்சி மண்ணின் நேசத்துக்குரிய வைத்தியர் விக்னேஸ்வரன் அவர்களுக்கு கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பு தமது 2023ம் ஆண்டுக்கான மண்ணின் மைந்தன் விருதினை வழங்கி வைப்த்து பெருமை கொண்டது.
அறுபதுகளில் அழகிய நடுத்தர குடும்பத்தில் நடுக் குழந்தை, எழுபதுகளில் எண்ணெழுத்தில் முன்னிலை, எண்பதுகளில் இன உணர்வும் உயர் கல்வியும் இணைந்த பயணம். தொண்ணூறுகளில் களத்திலும், வன்னியில் துயருற்ற மக்கள் நல்வாழ்வு பணிகளிலும் ஓயாத உழைப்பு, இரண்டாயிரங்களில் மக்கள் நல்வாழ்வு மேம்பாட்டு பணிகளும், மேற்படிப்பும் அத்துடன் உலகளாவிய நலவாழ்வு பணியும், இரண்டாயிரத்து பத்துகளில் போரினால் பாதிக்கப் பட்டோருக்கான தாயக மற்றும் உலகளாவிய பணிகள். இரண்டாயிரத்து இருபதுகளில் உலகளாவிய நோய்ப்பரம்பல் கட்டுப்பாட்டு நிபுணத்துவ சேவை எனத் தொடரும் எம்மண்ணின் அடிமட்ட வாழ்விலிருந்து உலகெங்கும் பணி செய்யும் உயர்வான வாய்ப்பை உவந்து
ஆழ்மன ஆவாவுடன் ஆயுள் முழுவதும் மக்கள் பணி செய்ய காத்திருக்கும், பேருள்ளம் கொண்ட, எம் மண்ணின் மனிதனாக வாழும் வைத்தியர் விக்னேஸ்வரன் சபாரத்தினம்.
1966ம் ஆண்டு சபாரத்தினம் ஈஸ்வரி தம்பதிகளுக்கு மூன்றாவது மகனாக வவுனியாவில் பிறந்து வாழ்ந்த இவர் வவுனியா மத்திய கல்லூரியில் கல்விகற்று யாழ் மருத்துவ பீடத்தில் கற்கைகளை நிறைவுசெய்து வைத்தியராக தனது பணியினை ஆரம்பித்தார்.
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை தலைமை வைத்திய அதிகாரியாக நீண்ட காலம் கடமையாற்றிய இவர் பதில் பிராந்திய சுகாதாரப் பணிப்பாளராகவும் கடமையாற்றினார். அத்துடன் வவுனியா வடக்கு பிரதேச சுகாதார அதிகாரியாகவும் கடமையாற்றிய அனுபவம் இவருக்குரியது.
ஈழதேசம் தமெக்கென ஆட்சிப் பரப்பினை கட்டியெழுப்பியபோது தமிழீழ சுகாதார சேவைகள் பணிப்பாளராக பொறுப்பேற்ற இவர் மட்டுப்படுத்தப்பட்ட வளங்களைக் கொண்டு எம் தேச மக்களின் சுகாதார தேவைகளை நிறைவு செய்ய அயராது பணி செய்தார் என்பது வரலாறு.
தாய் நிலத்தில் கொலரா பெருந்தொற்று பெருத்தாண்டவம் ஆடியபோது இவர் ஆற்றிய பெரும்பணியினை மறக்கமுடியுமா…
ஆழிப்பேரலை அரக்கத்தனமாக எம்மண்ணை அழித்தெடுத்தபோது பொத்துவிலில் இருந்து பொலிகண்டிவரை தமிழீழ மற்றும் புலப்பெயர் மருத்துவர் குழுவுடன் ஒரு இணைப்பாளராக இடையராது தம் மக்களின் நலன் காக்கும் பெரும் பணியினை எம்மண்ணில் புரிந்ததனை மறக்க முடியுமா…
பேரலை தூக்கியெறிந்த உடலங்களின் மூச்சுக்காற்றைத் தேடி அந்த மருத்துவ குழுவின் விழிகள் தூங்க மறந்த இரவுகள் எத்தனை ?
எம் தேசத்தின் பேரிடர்களைக் கையாண்ட இவரது வினைத்திறனை, உலக நாடுகளிலும் பயன்படுத்திக்கொள்வதற்காக, உலக சுகாதார அமைப்பு இவரை தன்னுள் உள்வாங்கிக் கொண்டது.
யுத்தப் பேரிடர்களை எதிர்நோக்கி சிதைந்து கொண்டிருக்கும் நாடுகளில் இவரது பணி ஆரம்பமானது…
சோமாலியா, தென் சூடான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக், கென்யா
ஆகிய நாடுகளில் அவசர கால பொதுச் சுகாதார ஆலோசகராகக் கடமை புரிந்தவர்,
தற்போது ….
எத்தியோப்பியாவில் அவசர கால பொதுச் சுகாதார சேவைகள் இணைப்பாளராக கடமை புரிகின்றார்.
தாய்மண்ணை அளவில்லாப் பேரன்புடன் நேசிக்கும் ஒரு மனிதநேய மனிதன்..
யுத்தப் பேரிடர்களிலும் ஆழிப்பேரலையிலும் தூங்காத இரவுகளால் மக்களைக் காத்த மருத்துவன் …
இன்று உலகளாவிய நாடுகளிலெல்லாம் நோய்ப்பரம்பல் கட்டுப்பாட்டு நிபுணத்துவபணி புரியும், எம் கிளிநொச்சி மண்ணின் நேசத்துக்குரிய வைத்தியர் விக்னேஸ்வரன் அவர்களுக்கு கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பு தமது 2023ம் ஆண்டுக்கான மண்ணின் மைந்தன் விருதினை வழங்கி வைப்பதில் பெருமை கொள்கின்றது.




